அதிக லாபம்ஈட்ட தரமில்லாத பொருட்களை விற்க வேண்டாம் வியாபாரிகளுக்கு, ரங்கசாமி வேண்டுகோள்

புதுச்சேரி,
அதிக லாபம்ஈட்டுவதற்காக தரமில்லாத பொருட்களை விற்க வேண்டாம் என்று வியாபாரிகளுக்கு முதல்அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்தார்.
நுகர்வோர் தினவிழா
புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா தருமாபுரி ஸ்ரீராம் திருமண நிலையத்தில் இன்று நடந்தது. குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் முகமது மன்சூர் வரவேற்று பேசினார்.
விழாவில் முதல்அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு நுகர்வோர் உரிமை குறித்து நடந்த கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசினையும் வழங்கினார்.
ரங்கசாமி
அப்போது முதல்அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:–
புதுவையில் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் பொதுமக்களை ஏமாற்றாமல் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்கவேண்டும். அதேபோல் பொதுமக்களும் தாம் வாங்கும் பொருட்கள் தரமானதுதானா? என்பதை உறுதி செய்து வாங்கவேண்டும்.
ஆசையால் அழிவுதான் உண்டாகும். அதிலும் பேராசை இருக்கக்கூடாது. அனைவருக்கும் லாபம் ஈட்டும் எண்ணம் இருக்கும். ஆனால் அதிக லாபம்ஈட்ட தரமில்லாத பொருட்களை விற்கக்கூடாது. விழிப்புடன் இருந்து தரமான பொருட்களை வாங்குவது நுகர்வோரின் கடமை.
வீட்டுமனை
அதிலும் வீட்டுமனைகள் வாங்கும்போது அதிக விழிப்புடன் இருக்கவேண்டும். 5 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலே நிறைய யோசிக்கிறோம். அப்படியிருக்க ரூ.5 லட்சம் செலவில் வீட்டுமனைகள் வாங்கும்போது பத்திரம் யார் பெயரில் உள்ளது? இடம் உண்மையிலேயே யாருக்கு சொந்தமானது? என்பதையெல்லாம் கவனித்து வாங்கவேண்டும். ஏதோ குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்று வாங்கினால் பிரச்சினைகள் ஏற்படும்.
இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை குடிமைப்பொருள் வழங்கல்துறை அனைத்து பள்ளிகளிலும் நடத்த வேண்டும். மாணவர்கள் விழிப்புடன் இருந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும்.
இவ்வாறு முதல்அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
விழாவில் துணை இயக்குனர் கிட்டி பலராமன், உதவி இயக்குனர் புருஷோத்தமன், கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment