வைகுண்ட ஏகாதசி விழாவில் அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெறவேண்டும்

திருச்சி,
வைகுண்ட ஏகாதசி விழாவின்போது அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெறவேண்டும் என்று கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
வருகிற 11–ந்தேதி (சனிக்கிழமை) ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் உணவு வணிகர்கள், காலாவதியான, கலப்படம் செய்யப்பட்ட, தப்பான குறியீடு உள்ள தரம் குறைந்த பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை தெரிந்தோ, தெரியாமலோ விற்பனை செய்யவோ மற்றும் இருப்பு வைக்கவோ கூடாது. அனுமதிக்கப்படாத நிறமிகள் மற்றும் வாசனை திரவியங்களை உபயோகப்படுத்தக்கூடாது. கொசு மற்றும் ஈக்கள் உணவுப் பொருட்களை மொய்க்காத வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும்.
அனுமதி பெற வேண்டும்
மேலும் அன்னதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் உணவு பாதுகாப்பு துறையினரிடம் பதிவு செய்து, உரிமம் பெற்ற பின்பே உணவு வழங்குதல் வேண்டும். உணவு தயாரிக்கப்படும் இடம் சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட குடிநீரை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் சமைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மூடி வைத்து பாதுகாப்பாக பரிமாற வேண்டும். சமையல் செய்பவர்கள், உணவுப் பொருட்களை பரிமாறி கையாள்பவர்கள் தொற்றுநோய் அற்றவர்களாக இருத்தல் மற்றும் தன்சுத்தம் பேணுபவர்களாக இருக்க வேண்டும். அன்னதானம் செய்பவர்கள் வழங்கும் உணவினால் ஏற்படும் உபாதைகளுக்கு தாங்களே பொறுப்பானவர்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவார்கள்.
புகார் செய்ய…
விழாவிற்கு வரும் பொதுமக்கள், அழுகிய மற்றும் உண்ண தகுதியற்ற பழங்களை வாங்க வேண்டாம் பேக் செய்யப்பட்ட உணவுகள், குடிநீர், குளிர்பானம் ஆகியவற்றை வாங்கும் போது காலாவதி தேதியை கவனித்து வாங்க வேண்டும். மேலும் தகவல்கள் பெறுவதற்கும் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கும் மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (உணவு பிரிவு) ஜமால் முகம்மது கல்லூரி அருகில், ரேஸ் கோர்ஸ் ரோடு, (ஆயுதப்படை எதிர்புறம், துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள் வளாகம், டி.வி.எஸ் டோல்கேட், திருச்சி என்ற முகவரியில் அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment