துறையூரில் நடந்த வியாபாரிகள் மாநாடு…பிரம்மாண்டம்! ஓட்டை நிரூபிக்க என தலைவர் தகவல்

துறையூர்: ""வியாபாரிகளின் ஓட்டு வங்கியை நிரூபிக்கவே, வியாபாரிகள் சங்க பொதுக்கூட்டத்தை கூட பிரம்மாண்டமாக நடத்த வேண்டியுள்ளது,” என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் முதல் மாநாடு, பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக வினியோகித்த அழைப்பிதழ், எட்டு பக்கங்களில், 407 பெயர்கள் மற்றும், 80 கிராம கிளை சங்கங்களின் ஊர் பெயர்கள் என பிரம்மாண்டமாக இருந்தது. முசிறி பிரிவு ரோட்டில் இருந்து கூட்டம் நடந்த பாலக்கரை வரை, இரண்டு கி.மீ., தூரம், ரோட்டின் இருபுறமும் சங்க கொடிகட்டி, பிளக்ஸ் பேனர் வைத்து, அரசியல் கட்சி கூட்ட ஏற்பாடு போல் இருந்தது.
மாநாட்டுக்கு வந்த மாநில நிர்வாகிகளுக்கு செண்டை மேளம், வாணவேடிக்கையுடன் வரவேற்பு தரப்பட்டது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், அரசியல் கட்சி கூட்டத்தை போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வியாபாரிகள் மாநாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மாநாட்டில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், பன்னாட்டு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையை கண்டித்து பேச, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பொது செயலாளர் மோகன், பொருளாளர் கோவிந்தராஜுலு உட்பட, மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர். மாநாடு ஏற்பாட்டை மாநில துணைத்தலைவர் கந்தன், துறையூர் சங்கத்தலைவர் செல்வராஜ், செயலாளர் காமராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் அம்மன் செல்வராஜ், சுப்ரமணியன், மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார் உட்பட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
துறையூர் மாநாட்டில் பங்கேற்க வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
உணவு பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டத்தின் தடையாணையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கவும், சட்டத்தில் உள்ள வணிகர்களை பாதிக்கும் திருத்தங்களை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க விதிகளை தளர்த்தியுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள, 21 லட்சம் வணிகர்களின் குடும்பம் பாதிக்கப்படும். நான்கு மாநில தேர்தல் முடிவுக்கு பின்னும் இந்த மத்திய அரசு அன்னிய முதலீட்டை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. ஆறுக்கு ஒரு ஓட்டு, வியாபாரி ஓட்டு உள்ளது. தேர்தல் வரும் போது ஓட்டு கேட்டு இந்த சட்டங்களை நிறைவேற்றும் மத்திய அமைச்சர்கள் வியாபாரிகள் தான் வரவேண்டும்.
வியாபாரிகள் அமைப்பில் அனைத்து மத, ஜாதி, கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். எந்த கட்சிக்கும் இந்த அமைப்பு தனிப்பட்ட முறையில் ஆதரவு தராது. வியாபாரிகள் நலனுக்கெதிராக செயல்படும் எந்த கட்சியும், எங்களுக்கு விரோதமானது தான். வியாபாரிகள் நலனுக்கெதிராக உள்ள சட்டங்களை திருத்தவும், வாபஸ் பெறவும் வலியுறுத்தி, கோவையில் மே மாதம் நடக்கும் வணிக தின மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்து, இதுபோன்ற கூட்டம் ஒவ்வொரு ஊராக நடத்தப்படுகிறது. வியாபாரிகளின் ஓட்டு வங்கியை நிரூபிக்கவே, வியாபாரிகள் மாநாட்டை அரசியல் கட்சி கூட்டம் போல் நடத்த வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment