சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் ரெயிலில் கேட்பாரற்று கிடந்தது

சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பு கொண்ட தடைச்செய்யப்பட்ட பொருளான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சென்டிரல்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து புகையிலை (ஜர்தா, பீடா) போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவதாக ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரெயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி தலைமையில் பாதுகாப்புப்படை போலீசார் நேற்று ரெயில் நிலையத்தில் அனைத்து பிளாட்பாரங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
புகையிலை
10–வது பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெட்டியில் உள்ள இருக்கைகளுக்கு கீழே 10 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அந்த மூட்டைகள் அனைத்தையும் சோதனையிட்டபோது அவற்றில் தடை செய்யப்பட்ட பொருட்களான புகையிலை வகைகள் இருப்பது தெரியவந்தது.
ரூ.3 லட்சம் வரை
இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி கூறியதாவது:–
நேற்று முன்தினம் இரவு அலகாபாத்திலிருந்து சென்னை சென்டிரலுக்கு வந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொண்டபோது புகையிலைகள் அடங்கிய 10 மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த மூட்டைகளை விற்பனை செய்யும் நோக்கத்தோடு வெளி மாநிலத்தவர் சிலர் கொண்டுவந்திருக்கின்றனர். ஆனால் போலீஸ் சோதனை செய்யும்போது தப்பிச்செல்லும் நோக்கில் இந்த மூட்டைகளை அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் வரை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குழிதோண்டி புதைப்பு
ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாரிடம் இருந்து பெற்ற மூட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் இந்த மூட்டைகள் அனைத்தும் கொடுங்கையூர் சூளைமேடு பகுதிக்கு கொண்டுபோய் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

No comments:

Post a Comment