லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை சிக்க வைத்தவருக்கு ரூ. 1 லட்சம் வெகுமதி

திருவள்ளூர் அருகே வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்க வைத்த நபருக்கு ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ரூ. 1 லட்சம் வெகுமதியாக அளித்தனர்.
 திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோரஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு தனக்கு வாரிசு சான்றிதழ் கோரி அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசனிடம் விண்ணப்பித்துள்ளார்.
 வாரிசு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அதிகாரி ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து சகாதேவன் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கொடுத்து, அவர்களின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்க வைத்தார்.
 இதுபோல் துணிச்சலாக கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்க வைத்த சகாதேவனுக்கு ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ரூ. 1 லட்சம் வெகுமதியாக அளித்தனர்.
 அதற்கான வரைஓலையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் திங்கள்கிழமை சகாதேவனுக்கு வழங்கினார். இதுகுறித்து தமிழ் மீட்சி இயக்கத்தின் மாநில செயலாளர் நந்தகோபாலன் கூறும்போது: ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஐந்தாவது தூண், தமிழ்மீட்சி இயக்கம், இந்திய மக்கள் நலமன்றம், விழிகள் மகளிர் இயக்கம், சட்ட உரிமை இயக்கம், காந்திய மக்கள் இயக்கம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட 20 இயக்கங்கள் சேர்ந்து ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்துள்ளோம்.
 இக்குழுவின் மூலம் இதுவரை இம்மாவட்டத்தில் இதுபோல் 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளோம். லஞ்சம் ஊழலை ஒழிக்க இனி இதுபோன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றார். இதில் நிர்வாகிகள் லயன்ஸ் சேகர், கடம்பத்தூர் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment