காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்

கரூர், பிப்.15:
கரூர் பகுதிகளில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்களை உணவுபாதுகாப்பு துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கரூர் பஸ் நிலையம், தாந்தோணிமலை, கோவை ரோடு, பசுபதிபாளையம், வெங்கமேடு பகுதிகளில் உள்ள கடைகள், குடோன்களில் நடைபெற்ற திடீர் சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் உணவு பொருட்கள் வாங்கும்போது பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும் என விளக்கம் அளித்தனர்.
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

பேராவூரணியில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

பேராவூரணி, பிப்.16:
பேராவூரணி கடைவீதியில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
காலாவதியான குளிர்பானத்தை அருந்திய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் காலாவதியான குளிர்பானங்கள், கெட்டுப்போன உணவு பொருட்கள், பாக்கெட் நொறுக்குதீணிகள் விற்பனை செய்யப்படுகிறதா? என மாநில உணவு பாதுகாப்பு ஆணை யர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஆலோசனையின்பேரில் மாவட்ட நியமன அலுவலர் தெட்சிணாமூர்த்தி உத்தரவின்பேரில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பெட்டிகடைகள், குளிர் பான கடைகள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பேராவூரணி கடைவீதியில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரமாராமநாதன் ஆய்வு நடத்தி காலாவதியான குளிர்பானங்கள், உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதேபோல் சேதுபாவாசத்திரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஒன்றிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் காலாவதியான எண்ணெய் குளிர்பானங்கள் அழிப்பு

தர்மபுரி, பிப்.16:
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தினேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தர்மபுரி நகரில் பேருந்து நிலையம், கடைவீதி, பென்னாகரம் சாலை, திருப்பத்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மளிகை கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் மற்றும் அவற்றின் குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், மாவு, லேபிள் இன்றி விற்பனை செய்த எண்ணெய், பேக்கிங் இல்லாமல் விற்பனை செய்த எண்ணெய் உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்த சோதனையின் போது, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோபிநாத், சேகர், குமணன், நாகராஜன், நந்தகோபால் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.