தாளூரில் பழைய மீன் விற்பனை நோய்கள் ஏற்படும் அபாயம்

பந்தலூர் : கேரள பகுதியில் வாகனம் மூலம் விற்பனை செய்த பின் மீதமான மீன்களை மாலை 6 மணிக்கு மேல்  தாளூர் பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர்.
பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட தமிழக கேரளா எல்லையான தாளூர் பகுதி உள்ளது. கேரள பகுதியில் வாகனம் மூலம் விற்பனை செய்த பின் மீதமான மீன்களை மாலை 6 மணிக்கு மேல் இப்பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர்.
கேரள பகுதியில் இந்த வகையான மீன்கள் மதியம் வரை மட்டுமே விற்பனை செய்ய முடியும்.  மாலை வேளைகளில் அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த மீன்களை வாங்குவதில்லை.  இந்நிலையில் அங்கு விற்பனையாகாத மீதமான பழைய மீன்களை இப்பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்வதால் அந்த மீன்களை சாப்பிடுபவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிறு சம்பந்தமான பல்வேறு நோய்கள் ஏற்படும்.  மீன்கள் ஐஸ் போட்டு குளிர்ச்சியான சூழலில் வைத்து விற்பனை செய்ய வேண்டும் ஆனால் இந்த மீன்களில் அமோனியம் போட்டு மாலை வரை பளிச்சென தெரியும் வகையில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.  இந்த மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.  
சேரங்கோடு ஊராட்சி மூலம் சுகாதார குழு அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் இக்குழுவினர் கேரளா எல்லை பகுதியில் மாலை நேரத்தில் இது போல் நடக்கும் பழைய மீன் விற்பனைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் உணவு பாதுகாப்பு அலுவலர்களும் இப்பகுதியில் இதுவரை ஆய்வு மேற்கொண்டதில்லை.  இதனால் கேரளா பகுதியில் விற்பனை செய்ய முடியாத கழிவு மீன்களை தமிழக எல்லை பகுதியில் எந்தவித தடையுமின்றி அமோகமாக விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு இதுபோன்று விற்பனை செய்யப்படும் மீன்களை கைபற்றி அழிக்க வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்று மீன்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment