அம்மா’ உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம்

தமிழக அரசு நடத்தி வரும், அம்மா மலிவு விலை உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்பு துறை உரிமம் கோரி, விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு உள்ளன. ஒரு வாரத்தில் உரிமம் கிடைக்கும் என, தெரிகிறது.
200இடங்களில்
சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒன்று என, 200 இடங்களில், அம்மா மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. ஐந்து ரூபாய்க்கு, பொங்கல், சாம்பார், எலுமிச்சை, கறிவேப்பிலை சாதங்கள், மூன்று ரூபாய்க்கு தயிர்சாதம்; ஒரு ரூபாய்க்கு இட்லி தரப்படுகிறது.குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. விரைவில், மூன்று ரூபாய்க்கு, இரண்டு சப்பாத்தி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பிற மாநகராட்சிகளிலும் அம்மா உணவகம், செயல்பாட்டில் உள்ளது. சமீபத்தில், சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், அம்மா மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. பிற மருத்துவமனைகளிலும், அம்மா மலிவு விலை உணவகம் திறக்க முயற்சி நடந்து வருகிறது.இந்நிலையில், அம்மா உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்புத் துறை மூலம், முறையான உரிமம் பெறும் முயற்சியில் அரசு ஈடுபட்டு உள்ளது.முதற்கட்டமாக, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு உரிமம் கோரப்பட்டு உள்ளது. இதன்படி, 108 உணவகங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் செலுத்தி, மாநகராட்சி விண்ணப்பித்து உள்ளது.
ஒரு வாரத்தில்இந்த விண்ணப்பங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஒரு வாரத்திற்குள், உரிமம் கிடைக்கும் என, தெரிகிறது.படிப்படியாக, சென்னையில் உள்ள பிற அம்மா உணவகங்கள், பிற மாநகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கும், உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெறப்படும் என, தெரிகிறது.ஓட்டல், உணவகம் உள்ளிட்ட உணவு சார்ந்த வியாபாரிகள், உணவு பாதுகாப்புத் துறையின் கீழ், பதிவு செய்தல், உரிமம் பெறுதல், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இதன்படி, பதிவு செய்யவும், உரிமம் பெறவும், வியாபாரிகள் சுணக்கம் காட்டி வரும் நிலையில், அரசு எடுத்துள்ள இந்த முயற்சி, முன்மாதிரியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment