உணவுத்துறை உரிமம் பெற பிப்., 4 இறுதி ‘கெடு’:விதிகளில் திருத்தம் கேட்கும் வணிகர்கள்

‘உணவு பாதுகாப்புத் துறையில், வணிகர்கள் அடுத்த ஆண்டு, பிப்., 4ம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும்’ என, மத்திய அரசு, ‘கெடு’ விதித்துள்ளது. ஆனால், ‘மேலும் ஓராண்டுக்கு அவகாசம் தர வேண்டும்; விதிகளில் திருத்தம் வேண்டும்’ என, வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நுகர்வோருக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைக்க வழி வகை செய்யும் வகையில், மத்திய அரசு, ‘உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் – 2006′ கொண்டு வந்தது. விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 2011ல் அமலுக்கு வந்தது.இதன்படி, ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்க்குள் வர்த்தகம் செய்வோர், 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுச்சான்று பெற வேண்டும். அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர், 2,000 ரூபாய் செலுத்தி, உரிமம் பெற வேண்டும்.
உரிய சான்று, உரிமம் பெறாவிட்டால், 1 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வரை அபராதம், சிறைத்தண்டனை தரும் வகையில், சட்டம் கடுமையாக உள்ளது.
இதற்கு, வணிகர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. பதிவு, உரிமம் பெற, இரண்டு முறை அவகாசம் தரப்பட்டது. மத்திய அரசு வழங்கிய, ஓராண்டு அவகாசம், அடுத்த ஆண்டு, பிப்., 4ல் முடிகிறது. அதற்குள், வணிகர்கள் பதிவு செய்வதும், உரிமம் பெறுவதும் கட்டாயமாகிறது.
தெருவோரத்தில், பஜ்ஜி சுட்டு விற்பவரும் இச்சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.இந்த நிலையில், ‘அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும்’ என, வணிகர் அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
அமைச்சரிடம் மனு:தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, தலைவர் விக்கிரமராஜா தலைமையிலான குழு, சமீபத்தில் மத்திய சுகாதார துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத்தைச் சந்தித்து, கோரிக்கை வைத்தது. தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர், வேல்சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகளும், குலாம் நபி ஆசாத்தை சந்தித்து, அவகாசம் கோரினர்.
இதுகுறித்து, வேல்சங்கர் கூறியதாவது:உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம், 1947 காலத்தை ஒப்பிட்டு போடப்பட்டுள்ளது. அப்போது இயற்கை விவசாயம் நடந்தது. தற்போது, தண்ணீர் இல்லை; குறுகிய கால பயிர்கள், உரம் போட்டு விளைவிக்கப்படுகின்றன.இதனால், அந்த காலம் போல், பொருளின் தரம் இருக்க வாய்ப்பில்லை.
பாலின் தரம்:பாலின் தரத்தில் மாற்றம் உள்ளது. குளிர் பிரதேச மாடுகள் தரும் பாலும், பிற பகுதி மாடுகள் தரும் பாலும் மாறுபடும்.ராமநாதபுரம் மிளகாய், ஆந்திராவில் விளையும் மிளகாயின் காரத்தன்மை ஒரே மாதிரியாக இருக்காது; மண்ணின் தன்மைக்கேற்ப மாறுபடும்.எனவே, விதிகளில், ‘தரம் என்பது, இதில் இருந்து இதுவரை…’ என, திருத்த வேண்டும்.அதுவரை, பதிவு செய்யவும், உரிமம் பெறும் அவகாசத்தையும் மேலும், ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment