தனியார் ஆம்னி பஸ்சில் கடத்தல் ரூ.2 லட்சம் ஹான்ஸ் பறிமுதல்

ஈரோடு: பெங்களூருவில் இருந்து கோவைக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் ஈரோட்டிற்கு கடத்தி வரப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 21 ஹான்ஸ் பெட்டிகளை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நேற்று பறிமுதல் செய்தார்.
ஈரோடு பஸ் ஸ்டாண்ட் சுவஸ்திக் கார்னர் பகுதியில் கொங்கு டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மதியம் 1 மணியளவில், பெங்களூருவில் இருந்து கோவை செல்வதற்காக, ஈரோடு வழியாக வந்த, சிட்டி எக்ஸ்பிரஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் ஆம்னி பஸ்சில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் மூட்டைகள் இருப்பதாக போலீஸார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி., பெரியய்யா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி ஆகியோர் பார்சல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி கூறியதாவது:
பெங்களூருவில் இருந்து கோவைக்கு ஈரோடு வழியாக வந்த, ஆம்னி பஸ்சில், தொப்பூரில் விபத்தில் கவிழ்ந்த லாரியில் இருந்து, 21 பெட்டிகளை கொங்கு டூர்ஸ் அண்ட் டிராவல் நிறுவனத்தில் இறக்கும்படி ஏற்றிவிட்டுள்ளனர்.
பார்சலில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 30 பாக்கெட்டுடன் கூடிய, 100 சிறிய பாக்ஸ்கள், ஒரு பெட்டியில் உள்ளன. 21 பெட்டிகளின் மொத்த மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் ஆகும் எனக்கூறினார்.
தொப்பூரில் விபத்து ஏற்பட்ட லாரியில் இருந்து, யார் பெயருக்கு இந்த பார்சல் அனுப்பப்பட்டது என கொங்கு டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிர்வாகியிடம் ஆம்னி பஸ் டிரைவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன், கருங்கல்பாளையம் பகுதியில், ராஜஸ்தானை சேர்ந்த ரஞ்சித் என்ற, பான்பராக் வியாபாரியை, பிளானிங் கமிஷன் ஆஃப் இந்தியா, மாவட்ட சேர்மன் என்ற பெயரில், சவாலி உள்ளாக்கான் என்பவர் தலைமையிலான கும்பல் மிரட்டி பணம் கேட்டபோது போலீஸில் சிக்கிக்கொண்டனர்.
ரஞ்சித்தின் வீட்டில், 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 3 பெட்டி ஹான்ஸ், 100 பாக்கெட் பான்பராக், சைனி ஹைனி, 3 பண்டல், பான்பராக் மிக்ஸ் புகையிலை, 4 பண்டல் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். தற்போது ஆம்னி பஸ் மூலம் வந்த ஹான்ஸ் அனுப்பியவர் பற்றி தகவல் கிடைத்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.
Click Here

No comments:

Post a Comment