நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3 லட்சம் குட்கா, ஜர்தா சிக்கின

சென்னை: குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து, நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, குட்கா, ஜர்தா பாக்கெட்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட, குட்கா, ஜர்தா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இவற்றை கண்காணிக்க, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில், கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து, நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் மாலை, சென்னை சென்ட்ரல் வந்தது. இதில் வந்த பார்சல்களை, சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர், அழகர்சாமி தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சில பார்சல்களில் இருந்த பொருட்கள் மீது, சந்தேகம் ஏற்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும், அவற்றை சோதனை செய்தனர். அப்போது, அதில், தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள, குட்கா, ஜர்தா பாக்கெட்கள், ஏராளமான எண்ணிக்கையில் இருந்தது தெரியவந்தது. அவற்றில், ஆமதாபாத் ரயில்வே பார்சல் அலுவலக முன்பதிவு எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்து. இந்த பார்சல்கள், சென்னையில் யாருக்கு செல்கிறது என்ற தகவல் இல்லை. பார்சல்களை பிளாட்பாரத்தில் தனியாக இறக்கி வைத்து, அவற்றை யார் எடுக்கின்றனர் என, போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். நேற்று பிற்பகல் வரை யாரும் வராததால், பார்சல்கள் பிரிக்கப்பட்டு, சோதிக்கப்பட்டதில், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தலா, 45 கிராம் எடை கொண்ட, 1,500 குட்கா, ஜர்தா பாக்கெட்கள் இருந்தது தெரியவந்தது. அந்த பார்சல்கள், தமிழக உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

No comments:

Post a Comment