'வியாபாரிகளுக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்படும்' ஜெ., பிரதமரானால் நடக்கும் என்கின்றனர் அமைச்சர்கள்



மதுரை:''வியாபாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து
சட்டங்களையும், முதல்வர் ஜெயலலிதா முக்கிய பொறுப்பிற்கு(பிரதமர்) வரும் போது நீக்குவார்,'' என அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, பச்சைமால் பேசினர்.
மதுரையில் மடீட்சியா, உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் எடை அளவுகள் சட்ட கருத்தரங்கிற்கு தலைமை வகித்து அமைச்சர் செல்லுார் ராஜூ பேசியதாவது:
மதுரையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசியல்வாதிகளால், வியாபாரிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடந்த ஆட்சியில் நடந்தவை வியாபாரிகளுக்கு தெரியும். பொருளாதார வல்லுனரான மன்மோகன்சிங்கால், பொருளாதாரம் கோமா நிலையில் உள்ளது. பாகிஸ்தான், சீனா, இலங்கை நாடுகள் அத்துமீறி நடக்கின்றன. இதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் இல்லை. சிறந்த தலைமை இல்லாமல் உள்ளது.
இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும் வகையில் வருகின்ற தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெறவேண்டும், என்றார்.
அமைச்சர் பச்சைமால் பேசியதாவது:
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்தவர் முதல்வர் ஜெயலலிதா. உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டத்தை மத்திய அரசு 2006ல் கொண்டு வந்தது. அதை தி.மு.க., அமல்படுத்தியது. சில்லரையாக எண்ணெய் விற்கலாம். அதற்கு தடை இல்லை. தராசுகளில் இரண்டாண்டுக்கு ஒரு முறை முத்திரை பதிக்கும் வகையில் மத்தியஅரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
ஆட்சி மாற்றம் அவசியம். வியாபாரிகளுக்குள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். மத்திய அரசால் வியாபாரிகளுக்கு எதிராக உள்ள அனைத்து சட்டங்களும் நீக்கப்படும். அதற்கான காலம் வரும். அ.தி.மு.க., வெற்றி பெற்று முதல்வர் முக்கிய பொறுப்பிற்கு வர வியாபாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும், என்றார்.
மடீட்சியா தலைவர் மணிமாறன், உணவுப் பொருள் வியபாரிகள் சங்கத் தலைவர் ஜெயபிரகாசம், எம்.எல்.ஏ.,க்கள் போஸ், சுந்தர்ராஜன், கூடுதல் தொழிலாளர் கமிஷனர் ராஜா, துணை கமிஷனர்கள் பொன்னுசாமி, சுப்பிரமணியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment