அமைச்சருடன் பேச்சுவார்த்தை எதிரொலி : கேன் வாட்டர் நிறுவனங்கள் ஸ்டிரைக் வாபஸ்

சென்னை: அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கேன் வாட்டர் நிறுவனங்கள் ஸ்டிரைக்கினை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். தமிழகத்தில் 857 குடிநீர் கேன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தன. இதன் மூலம் மக்களுக்கு தரமற்ற குடிநீர் வழங்கப்படுவதாக புகார் எழுந்தன. இதைத் தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
குடிநீர் கேன் நிறுவனங்கள் மாசு கட்டுபாடு வாரியம், பொதுப்பணித்துறை, உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெற்று, பின்னர் விற்பனை செய்ய வேண்டும். மாசுகட்டுப்பாடு வாரியம் இந்த நிறுவனங்களுக்கு நிபந்தனை அடிப்படையில் தடையில்லா சான்று வழங்கவும் நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 857 நிறுவனங்களில் 252 நிறுவனங்கள் வறட்சியான பகுதிகளில் நீர் எடுக்கப்படுகிறது என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 252 நிறுவனங்களுக்கு தடை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கு பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கடந்த 8ம் தேதி தொடங்கினர். இதில் 902 நிறுவனங்கள் குதித்தன. இதனால், சென்னையில் கேன் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரூ.30க்கு (20 லிட்டர்) விற்கப்பட்ட கேன் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜாராம் கூறியதாவது: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை சம்பந்தமாக பேசினோம்.
அவரும் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து எங்களுடைய போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் மீண்டும் உற்பத்தியை தொடங்கியுள்ளோம். எங்களுடைய கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment