சுகாதாரமான உணவுவகைகளைத் தயாரிக்க சமையல் கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்க இருக்கும் இலவசப் பயிற்சி

திருச்சி, ஜன. 10-
ஏழைகளுக்கான மானிய விலையிலான உணவு உட்பட தற்காலத்தில் உணவு விற்பனைக்குக் கிடைப்பது என்பது ஒரு எளிதான விஷயமாக உள்ளது. ஆனால் சுகாதாரமான உணவு என்பது அதனைத் தயாரிப்பவரிடத்திலும் இருக்கின்றது. இதனைக் கருத்தில்கொண்டு டீ விற்பனையாளர்கள், சாட் உணவு விற்பனையாளர்கள் மற்றும் சமையல்காரர்களுக்கு சுகாதார முறையில் உணவு தயாரிப்பது குறித்த இலவச பயிற்சியினை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த இலவசப் பயிற்சி திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள மாநில அரசின் ஹோட்டல் மானேஜ்மென்ட் அமைப்பின் கீழ் வழங்கப்படும். இத்தகைய பயிற்சிமுறைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உணவுப் பொருட்களின் தரத்தையும், சுகாதாரத்தையும் மேம்படுத்த உதவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார உணவு தயாரித்தலில் அடிப்படை பயிற்சி என்று குறிப்பிடப்படும் இந்தத் திட்டம் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக கமிஷனர் தலைமையில் நடைபெறும். 40 பேர் கொண்ட மூன்று பிரிவாக மொத்தம் 120 டீ விற்பனையாளர்களுக்கு 40 நாட்களுக்கு இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படும். தேயிலை மற்றும் காப்பித்தூளில் இருக்கும் கலப்படத்தை அறியவும் இவர்களுக்கு கற்றுத்தரப்படும். இதேபோன்ற மூன்று பிரிவுகளில் சாட் உணவு வகைத் தயாரிப்பாளர்களுக்கும் சமோசா, பேல்பூரி, பானிபூரி போன்ற உணவு வகைகளைத் தரமாகத் தயாரிக்க பயிற்சி வழங்கப்படும்.
ஹோட்டல்களில் பணிபுரியும் துணை சமையல்காரர்களுக்கான 20 நாள் பயிற்சி முகாம் நடைபெறும். தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் கொண்டு உணவுவகைகளை சுவைபடத் தயாரிப்பதற்கு இந்தப் பயிற்சி உதவிகரமாக இருக்கும்.
பிப்ரவரியில் துவங்க உள்ள இந்தப் பயிற்சி முகாம்கள் சென்னையிலும் நடத்தப்படும். பயிற்சி முடிவில் இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதன்மூலம் ஹோட்டல்களில் உணவுத்தரம் சுகாரமான முறையில் மேம்படுத்தப்படுவதால் அவர்களால் வாடிக்கையாளர்களையும் அதிக அளவில் கவர முடியும் என்று திருச்சி உணவுப் பாதுகாப்புத்துறையின் அதிகாரி ஏ.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இதுதவிர கையுறைகள் அணிந்து பணி புரிவது என்பதுவும் உணவுத்துறையின் விதிமுறைகளில் ஒன்றாக மாற்றப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment