உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டல்களில் திடீர் சோதனை

கோபி, ஜன.11:
கோபி பகுதியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
கோபி பகுதியில் உள்ள பல்வேறு உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக கோபி சப் கலெக்டர் சந்திரசேகர் சாகமுரிக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து ஹோட்டல்களில் சோதனை நடத்த மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சப்கலெக்டர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்ணன் தலைமையில் அலுவலர்கள் முருகேசன், மனோகர், குழந்தைவேலு மற்றும் கோபி தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராஜசேகர், சப்கலெக்டர் அலுவலக ஆர்.. சண்முக சுந்தரம் ஆகியோர் கொண்ட குழுவினர் நாய்க்கன்காடு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆய்வு நடத்தினர். அப்போது பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்கள் பாக்கெட் செய்திருப்பது கண்டு அவற்றை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.
அதே போன்று அங்கு தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் தயாரிக்கும் முறைகள் குறித்து விசாரணை செய்தனர். மேலும் அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் சீருடையுடன் இருக்கவும் அறிவுறுத்தினர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறும் போது, உணவகங்களில் சுவைக்காக போடப்படும் அஜினோமோட்டோ என்பது வேதிப்பொருளாகும். இதை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சாப்பிட் கொடுக்கக்கூடாது. அதனால் உணவகங்களில் அஜினோமோட்டோ பயன்படுத்தப்பட்டுள்ள உணவுகள் குறித்து கட்டாயம் அறிவிப்பு பலகை சாப்பிடும் அறையில் வைக்கப்பட வேண்டும்.
அதே போன்று சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை வகைகள் குறித்தும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பணியாளர்கள் கட்டாயமாக சீருடையுடன் தான் இருக்க வேண்டும். விதிகளை பின்பற்றாத உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment