மாணவர்கள் உட்கொள்ளும் மதிய உணவு சத்தானதா? என்.சி.எ.ஐ, சர்வே

நுகர்வோர் சேவையில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கிவரும் இந்திய நுகர்வோர் சங்கம் நாடு முழுவதும் உறுப்பினர்களைக் கொண்டது.
இச்சங்கம் உணவு பாதுகாப்பு, எரிபொருளில் கலப்படம், மருந்துகளில் கலப்படம் ஆகிய பல நுகர்வோர் பொருட்களில் பயிலரங்கம், கருத்தரங்கங்கள் நடத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல குழுக்களில் அங்கம் வகிக்கும் இச்சங்கம் நுகர்வோர் தொடர்பான பல விஷயங்களில் தனிக்கவனம் செலுத்தி, அரசின் நடைமுறைகளில் தன் கருத்தை வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 96 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு உணவுக் கலப்படம் பற்றிய 2 நாள் பயிற்சியை கடந்த 5 ஆண்டுகளில் நடத்திய இச்சங்கம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் இடையேயும் உணவுப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.
ஆஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக இணை பேராசிரியர் மற்றும் தெரஸா டேவிஸ், சென்னை பள்ளி மாணவர்களின் மதிய உணவைப்பற்றி ஒரு கருத்துக் கணிப்பை நடத்த விருப்பினர். அவரது விருப்பத்திற்கிணங்க சென்னையில் 25 பள்ளிகள் (9 மாநகராட்சி பள்ளிகள், 3 மத்திய உயர் நிலைக் கல்விப் பிரிவு பள்ளிகளும், 13 இதர ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளும்) இந்த ஆய்வில் கலந்து கொண்டன. பள்ளிக்கு 12 மாணவர்கள் வீதம், 10 முதல் 12 வயது உள்ள, 6முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்த ஆய்வு அக்டோபர் 2013 முதல் டிசம்பர் 2013 வரை நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு உணவுப்பாதுகாப்பு பற்றிய ஒரு கையேடு தரப்பட்டது. அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றிய ஆய்வுக் கேள்விகளும் அவர்களிடம் கேட்டு பதில் பெறப்பட்டது. குழந்தைகள் கொண்டுவந்த உணவு புகைப்படம் எடுக்கப்பட்டு ஒவ்வொரு வகை உணவுக்கும் தனிக் குறியீடுகள் வழங்கி, வரிசைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் 5 நாட்களுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் கண்டறிந்தவை
மொத்தம் 300 பேர் கலந்துகொண்ட இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 55.7% பெண்கள். இவர்கள் கொண்டு வந்த மொத்த உணவுகள் 2941.  ஒவ்வொரு 5 நாட்களுக்கு 9.8% வகை உணவு கொண்டு வந்ததை இது உணர்த்துகிறது.  இவற்றில் 8% மட்டுமே மாமிச உணவு வகையைச் சார்ந்தவை. பெரும்பான்மையானோர் தென்னிந்திய அரிசி வகை உணவு வகைகளைக் கொண்டு வந்தனர். புளிசாதம், எலுமிச்சை, தயிர்சாதம் போன்ற கலந்த சாதங்களை பெரும்பான்மையானோர் கொண்டு வந்தனர். வறுவல், பிஸ்ஸா போன்ற நொறுக்குத் தீனிகளை ஒரு சிலர் மதிய உணவாகக்கொண்டு வந்தனர்.
87.7% வீட்டில் மாணவர்களின் தாயார் செய்து கொடுத்தவை. மற்றவர்கள் (பாட்டி) செய்தவை 7.3%ல் அடங்கும். 5% உணவு வகைகளை வெளியில் இருந்து வாங்கி வந்தவை ஆகும். பழங்கள் காய்கனிகள் அடங்கிய உணவுகள் ஒரு சிலரது உணவில் மட்டுமே இருந்தது.
குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்த குழந்தைகள் வெறும் வெள்ளை சாதத்தைக் கொண்டு வந்தனர். மதிய உணவுப் பிரிவில் இருந்து முட்டை, சாம்பார் ஆகியவற்றை வாங்கிக் கொண்டனர். 84.3% குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த உணவை விரும்பி சாப்பிட்டனர். பெரும்பாலான பெற்றோருக்கு குழந்தைகளுக்கு சத்தான உணவு வகைகளை வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுக்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் தெரியவில்லை.
ஆய்வில் தெரிந்துகொண்ட உண்மைகள்
இந்த ஆய்வு முடிவு நிகழ்ச்சி கடந்த 6.1.14 அன்று சென்னையிலுள்ள முத்தமிழ் பேரவையில் நடந்த கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவுகளை கூறி மாணவர்கள் சத்தான உணவை பகல் உணவாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதின் அவசியத்தையும் கூறினர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் வர்ஷா, ஊட்டச்சத்து நிபுணர், இந்தியன் இன்ஸுடியுட் ஆப் நியுட்ரிசியன்ஸ், தெரஸா டேவிஸ் இணை பேராசிரியர், சிட்னி பல்கலைக்கழகம், மாலதி சீனிவாசன் தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் காலை மதிய நேரங்களில் சத்தான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.மாணவர்கள் மதிய நேரங்களில் உட்கொள்ளும் உணவுகளில் காய்கள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறினர். பர்கர், பீஸ்ஸா, கூல்டிரிங்க்ஸ் போன்ற ஜங்க் புட் உணவுகளை தவிர்க்க வேண்டும் எனவும் கூறினர். நிகழ்ச்சியின் இறுதியாக கலந்துகொண்ட பள்ளி மாணவர்களும் சத்தான உணவு குறித்து பேசினர். பிறகு பரிசுகளும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment