உணவு பாதுகாப்பு, தர நிர்ணய சட்ட விவகாரத்தில் தமிழக வணிகர்களுக்கு ஆதரவான நிலையை, ஜெயலலிதா எடுக்க வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பேட்டி


திருச்சி,ஜன.21-“உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விவகாரத்தில் தமிழக வணிகர்களுக்கு ஆதரவான நிலையை முதல்- அமைச்சர் ஜெயலலிதா எடுக்க வேண்டும்” என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரம ராஜா திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உணவு பாதுகாப்பு சட்டம்
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டமானது மத்திய அரசினால் 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அமலுக்கு வந்ததாக 2011ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த சட்டத்தில் உணவு தொழிலில் ஈடுபட்டு உள்ள வணிகர்களால் பின்பற்ற இயலாத கடுமையான ஷரத்துக்களை உள்ளடக்கி அவற்றை வணிகர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
இந்த சட்டத்தின்படி பதிவு செய்யாமலோ உரிமம் பெறாமலோ அடுத்த மாதம்(பிப்ரவரி) 4-ந்தேதிக்கு பிறகு உணவு தொழிலில் ஈடுபடும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை, 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகளால் வணிகர்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் உணவு தொழிலில் ஈடுபட்டு உள்ள வணிகர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
முதல் - அமைச்சருக்கு கோரிக்கை
இந்நிலையில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 6 மாத சிறைத்தண்டனை, 5 லட்சம் அபராதம் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் தமிழக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதிகாரிகள் வணிகர்களை அச்சுறுத்துவதை நிறுத்தாவிட்டால் உணவு தொழிலில் ஈடுபட்டு உள்ள அனைத்து வணிகர்களையும் ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் வணிகர்களுக்கு ஆதரவாக இருந்து வருவது போல் முதல் - அமைச்சர் ஜெயலலிதா இந்த உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விவகாரத்திலும் தமிழக வணிகர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அகில இந்திய மாநாடு
டெல்லியில் வருகிற பிப்ரவரி 27 மற்றும் 28-ந்தேதிகளில் அகில இந்திய வணிகர் சங்கங்களின் மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் இந்த சட்டம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும் அந்த மாநாட்டில் தேர்தலில் வணிகர்களின் நிலைப்பாடு பற்றிய முடிவுகளும் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment