வடலூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு அலுவலரிடம் தகுதிச் சான்று பெற வேண்டும் கலெக்டர் தகவல்

கடலூர், -
வடலூரில் வரும் 17–ந் தேதி தைப்பூச விழா நடைபெறுகிறது. இதனால் வடலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தைப்பூச விழா
வடலூரில் 17–ந் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் அனைத்து வாகனங்களும் வடலூர் புதிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி சபை வழியாக செல்ல வேண்டும். கும்பகோணத்திலிருந்து, வடலூர் வழியாக சென்னைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வடலூர் சந்திப்பு சாலை அருகே நிறுத்தாமல் அஞ்சலை மருத்துவமனை எதிரே உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி செல்ல வேண்டும். பண்ருட்டியிலிருந்து, வடலூர் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து உள்ளே சென்று கடலூர் மார்க்கமாகவோ, கும்பகோணம் மார்க்கமாகவோ, விருத்தாசலம் மார்க்கமாகவோ செல்ல வேண்டும். கடலூர் வழியாக கும்பகோணம் செல்லும் அனைத்து வாகனங்களும் வடலூர் சந்திப்பு சாலை அருகே நிறுத்தாமல் பரமேஸ்வரி திருமண மண்டபம் எதிரே உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி செல்ல வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து வடலூர் மார்க்கமாக வரும் அனைத்து வாகனங்களும் மற்றும் வடலூர் சபை சிறப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் அனைத்து வாகனங்களும் மந்தாரக்குப்பம் நெற்வேலி டவுண்ஷிப் இந்திரா நகர் ஆர்ச் கேட் வழியே வடலூர் பேருந்து நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். தைப்பூச சிறப்பு பேருந்துகள் அனைத்தும் வடலூர் சபையில் உள்ள சிறப்பு பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து வரும் மாட்டுவண்டிகள், டிராக்டர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும், மற்றும் சிட்கோ மைதானத்திலும் குறிஞ்சிப்பாடி வழியாக வரும் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்கள் சேராக்குப்பம் வழியாக சென்று ராகவேந்திரா சிட்டி மைதானத்திலும், பண்ருட்டியில் இருந்து வரும் மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர்கள் ராகவேந்திரா சிட்டி மைதானத்திலும், சேத்தியாத்தோப்பு மார்க்கமாக வரும் மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர்கள் சிதம்பரம் சாலையில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு அருகில் உள்ள டி.எஸ்.கே. பெட்ரோல் பங்க் அருகில் எதிரில் உள்ள மைதானத்தில் நிறுத்த வேண்டும். அன்னதானம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் அதற்கான உணவு பாதுகாப்பு அலுவலரிடம் உணவுக்கான தகுதிச் சான்று பெற்று, அன்னதானம் வழங்க காவல் துறையில் பதிவு செய்து, அதற்காக அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதிக்கப்படாத இடத்திலோ அல்லது உணவு பாதுகாப்பு அதிகாரியால் தகுதிச் சான்று பெறாத உணவுப்பொருளையோ அன்னதானம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அன்னதானம் வழங்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 94434 34024. வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்று இடங்களில் பெரிய திரை அமைத்து ஒளிபரப்பப்படும். விளம்பர பதாகைகள் வைக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபாதை கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் வைக்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மேற்கண்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment