உணவுப் பாதுகாப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க கோரிக்கை- வணிகர் சங்கப் பேரமைப்பினர் மனு

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தில் வர்த்தகர்களை பாதிக்கும் அம்சங்கள் உள்ளதால், தமிழகத்தில் அதை செயல்படுத்தாமல் நிறுத்திவைக்க வேண்டும் என்று முதல்வர் தனிப்பிரிவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
மனுவில் உள்ள விவரங்கள் குறித்து கோட்டையில் நிருபர்களிடம் சங்கத் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் (2006) மற்றும் ஒழுங்குமுறை விதிகள்-2011 விரைவில் அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியதாக இந்த சட்டம் உள்ளது.
எனவே, சட்டத்தை முழுமையாக மாற்றி அமைத்து அதன்பிறகே சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்திடம் கடந்த 10-ம் தேதி நேரடியாக மனு கொடுக்கப்பட்டது. ‘சட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். ஒரு வருட கால நீட்டிப்பு தரப்படும்’ என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 4-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தில் முழுமையான மாற்றங்கள் செய்யவும், மேலும் ஒரு வருட கால நீட்டிப்பு செய்யவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யவேண்டும். அதுவரை, தமிழகத்தில் இச்சட்டம் தொடர்பாக மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளதாக விக்கிரமராஜா தெரிவித்தார்.

No comments:

Post a Comment