பிராணிகள் சித்ரவதை – உரிமம் பெறாத இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை

புதுடெல்லி, ஜன.23:
                                      பிராணிகள் நல சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இறைச்சிக்காக ஆடு, மாடுகளை கொடூரமாக வெட்டுகிறார்கள். இதற்கு முறையாக இறைச்சி கடை உரிமையாளர்கள் அனுமதி பெறுவது இல்லை. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த 2012ம் ஆண்டு விசாரித்து, அனைத்து மாநில அரசுகளும் உரிய முறையில் இறைச்சி கூடம் குறித்து விசாரித்து பதில் அளிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி ராதாகிருஷ்ணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இறைச்சி கூடங்கள் அனுமதியில்லாமல் தமிழகத்தில் இயங்குவது இல்லை. மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது என்று கூறப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்த நீதிபதிகள், பிராணிகள் இறைச்சிக்காக கொடூரமாக கொல்லப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அனுமதி பெறாத இறைச்சிக் கடைகளே இல்லை என்று தமிழக அரசு கூறுவதை நாங்கள் உடனே ஏற்க முடியாது. எனவே எத்தனை கடைகளுக்கு லைசென்சு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை தமிழக அரசு எடுத்துள்ளது என்பது குறித்து 4 வாரங்களில் தமிழக அரசு விரிவாக பதில் அளிக்க வேண்டும். இதில் மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் பிராணிகளுக்கு நடக்கும் கொடூரம் அதிகரித்துவிடும். எனவே மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment