வேலூரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

வேலூர்,
வேலூரில் உள்ள டாஸ்மாக் பார், ஓட்டல், தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
திடீர் சோதனை
வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகன்னாதன் உத்தரவின் பேரில் மாநகர உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவுரிசுந்தர், கொளஞ்சி, சுரேஷ் ஆகியோர் நேற்று காலை வேலூர் பழைய பஸ் நிலையம், கிருபானந்த வாரியார் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டாஸ்மாக் பார்கள், தள்ளுவண்டி கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் வைக்கப்பட்டு இருந்த முறுக்கு உள்பட திண்பண்டங்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினார்கள்.
மேலும் ஓட்டலில் தரம் குறைவான முறையில் இருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அங்கு 5–க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
டாஸ்மாக் பாரில் சுகாதாரமற்று இருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். பழைய பஸ் நிலையத்தில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள், பழரச கடைகளில் சுத்தமாக உள்ளதா? என்று சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்தவர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் உணவு பொருட்கள் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.
தொடர் நடவடிக்கை
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் தான் உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்’ என்றனர்.

No comments:

Post a Comment