பிளாட்பார உணவகங்களுக்கு கட்டுப்பாடு: சுத்தமான பாத்திரம்–கையுறை அணிந்து சமைக்க வலியுறுத்தல்

சென்னை, ஜன. 24–
சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாட்பார உணவகங்கள், தள்ளுவண்டி உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பல உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் பிளாட்பார உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இது தொடர்பாக பிளாட்பார கடை உரிமையார்கள், நடுத்தர ஓட்டல் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் டவுட்டனில் நடந்தது. உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி லட்சுமி நாராயணன், அதிகாரி சதாசிவம், லோக நாதன் ஆகியோர் ஓட்டல் ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி எடுத்து கூறினார்கள்.
ஒரே எண்ணையில் இரு முறைக்கு மேல் உணவு பலகாரங்கள் தயாரிக்க கூடாது. மீண்டும் மீண்டும் அதே எண்ணை பயன்படுத்தினால் புற்றுநோய் உருவாகும்.
கையுறை, தலை கவசம் அணிந்தே சமையல் செய்ய வேண்டும். சுத்தமான பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். ஈ மொய்க்காதபடி உணவு பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். குப்பை, கழிவுநீர், திறந்த சாக்கடை பகுதிகளில் கடைகள் நடத்தக்கூடாது.
தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை உணவு சமைக்க பயன்படுத்தக்கூடாது. சைவம், அசைவ உணவுகளை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை விற்பனையாகும் ஓட்டல்கள் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி உரிமம் பெறவேண்டும். தள்ளுவண்டி கடைகள் ரூ.100 செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
சமையலில் ஈடுபடும் முறைகள் பற்றி டவுட்டன் ஓட்டலில் அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

No comments:

Post a Comment