சாலையோர உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

மும்மடங்கு விலையில் தரமற்ற உணவு விற்பதாக புகார் கூறப்பட்ட விக்கிரவாண்டி பகுதியில் உள்ள சாலையோர உணவகங்களில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் புற்றீசல்கள் போல் பல்வேறு இடங்களில் உணவகங்கள் பெருகி உள்ளன.
இந்த உணவகங்களில் நீண்ட தூரப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அங்கு உணவுப் பொருள்கள் தரமற்று இருப்பதாகவும் மூன்று மடங்கு விலை வசூலிப்பதாகவும் பயணிகள் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.
இந் நிலையில் வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விக்கிரவாண்டி பகுதி சாலையோர உணவகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
ஆய்வின்போது உணவுப் பொருள்கள் தரமாகவும், பரிமாறும் இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து பஸ் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்த சாலையோர உணவகங்களில் பயணிகளின் உடலுக்கு கேடு விளைக்கும் தரமற்ற உணவுகளை மூன்று மடங்கு விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதற்கு துணை போகும் வகையில் பஸ் ஓட்டுநர்களும் அதுபோன்ற உணவகங்களில் நிறுத்துகின்றனர்.
சம்பிரதாய சோதனைகள் மூலம் இவர்களை கட்டுப்படுத்த முடியாது. தொடர் கண்காணிப்பும், கடும் நடவடிக்கையும் எடுத்தால் மட்டுமே, தரமான உணவுப் பொருள்கள் சாலையோர உணவகங்களில் சாத்தியம் என்கின்றனர் பயணிகள்.

No comments:

Post a Comment