கோபியில் ஓட்டலில் அதிகாரிகள் ஆய்வு பாதுகாப்பாக வைக்கப்படாத உணவு பொருடகள் பறிமுதல்

கோபிசெட்டிபாளையம்,
கோபியில் உள்ள ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பாதுகாப்பாக வைக்கப்படாத உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அழித்தனர்.
திடீர் ஆய்வு
கோபிசெட்டிபாளையம் ஈரோடு–சத்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிப்பதாக கோபி உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி கலெக்டரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்ணன், மனோகரன், முருகேசன், குமாரவேலு ஆகியோர் குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சாப்பாடு, குழம்பு, ரசம் உள்ளிட்ட உணவு பொருட்கள் மூடிவைக்கப்படாமல் இருந்தது. தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரம் சுகாதாரமற்று காணப்பட்டது. மேலும் பார்சல் உணவு வழங்குவதற்காக சாம்பார், ரசம், மோர் ஆகியவை பாலித்தீன் கவரில் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து, அதிகாரிகள் பார்சல் கட்டி வைக்கப்பட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து, குப்பை கிடங்கில் போட்டு அழித்தனர்.
அறிவிப்பு பலகை
சமையில் அறைக்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பயன்படுத்தப்படும் எண்ணெய், உப்பு உள்ளிட்ட பொருட்கள் குறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டறிந்தனர். சமையல் அறையில் தேவையில்லாத பொருட்களை அகற்றவேண்டும் என்று கூறினார்கள்.
கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் லுங்கி அணியக்கூடாது என்றும், சுகாதாரமாக உணவுகளை பரிமாறவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மேலும் கடை ஊழியர்களின் மருத்துவ சான்றிதழ்களை உடனடியாக பெறவேண்டும் என்று உரிமையாளருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, “ஓட்டல்களில் உணவு பொருட்களை மூடி வைக்கவேண்டும். அஜினமோட்டோ மற்றும் எந்தவகையான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்று ஓட்டலில் அறிவிப்பு பலகை வைக்கவேண்டும்.“ என்றனர்.

No comments:

Post a Comment