ஹோட்டல்களில் திடீர் சோதனைஉணவுப் பொருள்களில் கரப்பான் பூச்சி, நாள்பட்ட இறைச்சி-தினமணி செய்தி

மதுரையில் உள்ள ஹோட்டல்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், மாவு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் கரப்பான் பூச்சிகள் இருந்ததும், பல நாள்கள் ஆன இறைச்சி சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
  மதுரை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில், நீண்ட நாள்கள் சேமித்து வைக்கப்பட்ட இறைச்சி வகைகள் சமைத்து வழங்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் சமையலறை பராமரிக்கப்படுவதாகவும், விலைப் பட்டியல் வைப்பதில்லை என்றும் ஏராளமான புகார்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், மாவட்ட வழங்கல் அலுவலரும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான ஜி.லதா, வழங்கல் பிரிவு வட்டாட்சியர்கள் ராமையா, விஜயகுமார், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கொண்ட குழுவினர் ஹோட்டல்களில் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்  .
  மதுரை மாவட்ட நீதிமன்றம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் பகுதியில் உள்ள 12 ஹோட்டல்களில் சோதனை நடத்தப்பட்டதில், அனைத்து ஹோட்டல்களிலுமே முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. பெரும்பாலான ஹோட்டல் சமையலறைகள் சுகாதாரமாகப் பராமரிக்கப்படவில்லை.
  ஒரு ஹோட்டலில் மாவு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் கரப்பான் பூச்சிகள் இருந்தன. அவற்றை உடனடியாக கொட்டி அப்புறப்படுத்த ஆய்வுக் குழுவினர் உத்தரவிட்டனர். சில ஹோட்டல்களில் ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் வகைகள் பல நாள்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவற்றையும் அப்புறப்படுத்த அறிவுறுத்தினர்.
  இந்த ஆய்வில் சுகாதாரக் குறைபாடு கண்டறியப்பட்ட 12 ஹோட்டல்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் ஹோட்டல் உரிமையாளர்கள் பதில் அளிக்க வேண்டும். இந்த ஆய்வு குறித்த அறிக்கையும் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவரது உத்தரவின்பேரில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் லதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment