கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ரூ1 கோடி மதிப்பு குட்கா பொருட்கள் ராட்சத பள்ளத்தில் கொட்டி அழிப்பு

சென்னை, : ராயபுரம் பகுதியில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லட்சுமி நாராயணாவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் சதாசிவம், ஜெயராஜ், ஜெயகோபால், இளங்கோ, சுந்தரராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் ராயபுரம் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, எஸ்என் செட்டி தெருவில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான ஒரு குடோனில் குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அங்கிருந்து, ரூ1.11 கோடி மதிப்புள்ள 32 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, அதன் உரிமையாளர் பாலாஜிக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு சீல் வைக்கப்பட்ட குடோனுக்கு அதிகாரிகள் சென்றனர். 10 மணி வரை குடோன் உரிமையாளர் பாலாஜி வரவில்லை. இதையடுத்து ராயபுரம் போலீசார் வரவழைக்கப்பட்டு, குடோன் பூட்டை உடைத்து, அங்கிருந்த 32 டன் குட்கா பொருட்களை லாரி மூலம் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்துக்கு கொண்டுவந்தனர்.
அங்கு 20 அடி ஆழம், 15 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட ராட்சத பள்ளம் தோண்டி உணவு பாதுகாப்பு துரை அதிகாரி லட்சுமி நாராயணா முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை கொட்டினர். அதனுடன் மாட்டு சாணம் கொட்டப்பட்டு பள்ளம் மூடப்பட்டது.

No comments:

Post a Comment