ரயில்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ5.50 லட்சம் புகையிலை பொருட்கள் தீயிட்டு அழிப்பு

ஈரோடு, : ஈரோடு ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை அதிகாரிகள் தீயிட்டு அழித்தனர்.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் 22ம்தேதி ஒரு பார்சல் வந்துள்ளது. அப்போது ரயில்வே ஊழியர்கள் அந்த பார்சலை இறக்கி ரயில்நிலையத்தில் உள்ள பார்சல் பிரிவிற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் பார்சல்களை கோவை செல்லும் ரயிலில் அனுப்புவதற்காக எடுக்க சென்றபோது சந்தேகத்தின்பேரில் பார்சல்களை பிரித்து பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
13 பண்டல்களில் 5.50 லட்ச ரூபாய் மதிப்பில் இருந்த 831 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கணேசன் அந்த பொருட்களை ரயில்வே போலீசில் ஒப்படைத்தார்.
ஆனால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எங்கிருந்து அனுப்பப்பட்டது, யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் இந்த பொருட்களை கேட்டு யாரும் வராத நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் நேற்று பார்சல் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியில் காலி இடத்தில் புகையிலை பொருட்களை தீ வைத்து எரிக்க முடிவு செய்தனர். அதன்படி உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி, ரயில்வே இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முருகன், முத்துகிருஷ்ணன், பூபாலன் ஆகியோர் 831 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை தீயிட்டு எரித்தனர்.

No comments:

Post a Comment