தொழில் நாடு: நல்லெண்ணெய் விலை உயர்ந்தது ஏன்?

தமிழகத்தில், உணவு உற்பத்தி தொழில் மட்டுமல்ல, எல்லா பிரிவுகளிலும், தொழில் மற்றும் வர்த்தகம் மந்தமாகவே உள்ளது. இதற்கு, மின்வெட்டு பிரச்னை முக்கிய காரணம். உற்பத்தியாளர்களுக்கு வேண்டிய அளவு, அரசு ஊக்கம் அளிக்கவில்லை. இதனால், உள்ளூர் உற்பத்தி வெகுவாக குறைந்து, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள்தான் அதிக அளவில் விற்கின்றன. அதற்கு, உள்ளூர் தயாரிப்புகளால் ஈடு கொடுக்க முடியவில்லை. உதாரணத்திற்கு, முன்பெல்லாம், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவை தான் பிரதானமாக சமையலுக்கு பயன்படுத்தப்பட்டன. தற்போது, அந்த நிலை இல்லை. எள், கடலை விளைச்சலுக்கு அரசு ஊக்கம் அளிக்காததால், உற்பத்தி குறைந்து விட்டது. இதனால், நல்லெண்ணெய் விலை, லிட்டர், 300 ரூபாயாகவும்; கடலை எண்ணெய் விலை, லிட்டர், 250 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது. அதுவே, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் லிட்டர், 70 ரூபாய்க்கும், சூரியகாந்தி எண்ணெய் லிட்டர், 80 ரூபாய்க்கும் கிடைக்கிறது. குறைந்த விலை எண்ணெயை வாங்கவே, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உள்ளூரில் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு இருந்தால், நல்லெண்ணெயும், கடலை எண்ணெயும், இறக்குமதி எண்ணெய்களுக்கு ஈடுகொடுத்திருக்க முடியும். வேளாண் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தாததால், எங்கள் வியாபாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
அதே போல், எள் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு அளித்த அனுமதியும் விலை உயர்வுக்கு காரணம். தேவைக்கும் அதிகமாக உற்பத்தி ஆகும்போது தான், ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும். புதிதாக அமையும் மத்திய அரசு, இதில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் லாபம் அடைந்தால் தான், உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்கும். அதற்கு, விவசாயிகள், தங்களின் விளைபொருட்களை நேரடியாக கொண்டு விற்பனை செய்ய வசதியாக, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் அமைக்க வேண்டும். இந்த முயற்சியில், நம் நாட்டில், குஜராத் தான் முதலிடத்தில் உள்ளது. இதனால், அந்த மாநிலத்தில், விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. இந்த கூடங்களின் பராமரிப்புக்காக மட்டும், அரசு, ஒரு சதவீத ‘செஸ்’ (வரி) வசூலிக்கிறது.
தமிழகத்தில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில், விளை பொருட்களை விவசாயிகளே நேரடியாக விற்பதற்கு நல்ல வசதி உள்ளது. தற்போது, தமிழகத்தில், 220 விற்பனை கிடங்குகள் கட்டப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் எல்லா இடங்களிலும், இந்த கிடங்குகளை அமைக்க வசதியாக, மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கித்தர வேண்டும். மற்ற இடங்களில் விற்பனையாகும் விளை பொருட்களுக்கு, ஒரு சதவீத விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது. அது, கைவிடப்பட வேண்டும். ‘உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம்’ உணவு பொருள் தொழிலுக்கும், வியாபாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த சட்டத்தில், 1954ல் உள்ளது போன்று தரம் இருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த காலத்தில், ஆறு மாத பயிர் விளைவிக்கப்பட்டது. பூச்சி மருந்து இல்லை, இயற்கை உரம்தான். தற்போதைய நிலை வேறு. மூன்று மாதத்தில் நெல் விளைகிறது, பூச்சி மருந்து அடிக்கிறோம், ரசாயன உரம் போடுகிறோம். அப்படி இருக்கும்போது, அந்தக்கால தரம் இருக்க முடியாது. உதாரணத்திற்கு, வெல்லத்தில் சல்பேட் அளவு – 70 பி.பி.எம்., அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும் என, புதிய தர நிர்ணய சட்டம் சொல்கிறது. ஆனால், நம்மூரில் தயாராகும் வெல்லத்தில், சாதாரணமாகவே 500 முதல் 1,000 பி.பி.எம்., வரை சல்பேட் அளவு உள்ளது. அதன்படி பார்த்தால், புதிய தர நிர்ணய சட்டப்படி, எந்த விதமான கெட்ட நோக்கமும் இல்லாமல் வெல்லம் தயாரித்து விற்றாலும், அது தரக்குறைவாக கருதப்பட்டு, ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும். அதனால், இந்த சட்டத்தை செயல்படுத்தினால், உற்பத்தி குறையும், வர்த்தகமும் பாதிக்கப்படும். எனவேதான், காலத்திற்கேற்ப, விதிமுறைகளை வகுக்க வேண்டும். விவசாயிகள், வியாபாரிகள், விஞ்ஞானிகள் கொண்ட குழுவை அமைத்து, புதிய தர நிர்ணய சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
எஸ்.பி.ஜெயபிரகாஷ், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர்

No comments:

Post a Comment