பால் பண்ணை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

மும்பை,
பால் பண்ணை உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய உணவு மற்றும் மருந்து துறை பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
பால் பண்ணை உரிமையாளர்
மராட்டிய மாநிலம் அகமத் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவரது பால் பண்ணையில் உணவு மற்றும் மருந்து துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தரம் குறைந்த பால் விநியோகம் செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்தநிலையில் விஜயகுமார் மும்பை பாந்திராவில் உள்ள உணவு மற்றும் மருந்து துறை உதவி கமிஷனர் கவுதம் என்பவரை சந்தித்து இந்த பிரச்சினை தொடர்பாக பேசினார். அப்போது, தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதற்காக அவருக்கு ரூ.1 லட்சமும், அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரி சரளா என்பவருக்கு ரூ.25 ஆயிரமும் கொடுத்தார்.
பெண் அதிகாரி கைது
இந்தநிலையில், சமீபத்தில் விஜயகுமாரை பெண் அதிகாரி சரளா போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் மேலும் ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அவர்கள் கொடுத்த யோசனையின் படி நேற்று காலை ரசாயன பொடி தடவிய ரூ.2 லட்சத்துடன் நவிமும்பை வாஷியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று பெண் அதிகாரி சரளாவை சந்தித்து பணத்தை கொடுத்தார்.
பெண் அதிகாரி சரளா பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் உதவி கமிஷனர் கவுதம் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment