உணவுப் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக மாற்றம் செய்ய வேண்டும்-தினமணி செய்தி

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக மாற்றம் செய்ய வேண்டும் என, திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து வணிகர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட வர்த்தகக் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவர் தலைவர் கே. முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, மாநிலப் பொதுச் செயலர் கே. மோகன், மாநிலப் பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் பேசினர்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதில்லை. வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்காக போராட்டங்களுக்கு ஆதரவு மட்டுமே கோரும். மாற்றாக அந்தக் கட்சிகளுடன் இணைந்து போராடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அரசியல் சார்பற்று, ஒட்டுமொத்த வணிகர்களின் நலனுக்காகவே பாடுபடும் என விக்கிரமராஜா உறுதியளித்தார்.
பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தால் கோடிக்கணக்கான வணிகர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, சில்லறை வணிகத்தில் அந்நிய நாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்கை முடிவை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டமானது உணவு தொடர்பான தொழில்களில் ஈடுபடுவோரை ஒட்டுமொத்தமாக அழிக்கும் சட்டமாக உள்ளது. இச் சட்ட அமலுக்கு 6 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள், அதிகாரிகள், அறிஞர்கள் அடங்கிய குழுவை நியமித்து, இச் சட்டத்தில் முழுமையாக மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
வணிகர்களுக்கு நடைமுறைச் சிக்கல்களை அளிப்பதுடன், விலைவாசியை பன்மடங்கு உயர்த்தக்கூடிய சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தக் கூடாது. மே 5-ல் வணிகர் தின விழாவை வணிகர்களின் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடாக கோவையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அன்றைய தினம் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
வணிகர் நல வாரியத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும். வேளாண் விளைபொருள் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும். வணிகர்களுக்கு வங்கிகள் எளிய முறையில் கடன் வழங்க வேண்டும்.
சில்லறை வணிகத்தை வளர்ச்சி பெறச் செய்ய சிறப்புத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். வணிகர்களைப் பாதிக்கும் பல்வேறு சட்டங்களைத் திருத்தியமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நெல்லை வியாபாரிகள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் காளிதாசன், மாவட்டத்தில் உள்ள பல்வேறு வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment