அரசியல், ஓட்டு வங்கியால் முடக்கப்படும் சட்டம் நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆவேசம்

திருச்சி: "அரசியல், ஓட்டுவங்கி போன்ற காரணங்களால், சட்டம் அமலுக்கு வர தாமதமாகிறது’ என, "ஃபெட்காட்’ கருத்தரங்கில் நுகர்வோர் அமைப்பினர் பேசினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு (ஃபெட்காட்) சார்பில், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம்-2006 சிறப்பாக நடைமுறைப்படுத்துவது குறித்த மாநில கருத்தரங்கம், திருச்சியில் நடந்தது. ஃபெட்காட் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். ஆலோசகர் நிஜாமுதீன் துவக்கி வைத்தார். திருச்சி வக்கீல் சங்க தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்து பேசுகையில், ""மனித வளம் மேம்பட உணவுப்பாதுகாப்பு தரநிர்ணயம் அவசியம். 1954ம் ஆண்டு உணவுப்பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்கீழ், 2,000 வழக்கு நிலுவையில் உள்ளது. புதிதாக வந்துள்ள உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் முடங்கி கிடக்கிறது,” என்றார்.
தமிழக உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கம் பொதுச்செயலாளர் ராஜகோபால் பேசியதாவது:

உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தால் நுகர்வோர், வியாபாரிகளுக்கு ஏராளமான பலன் உள்ளன. பழைய சட்டத்தில் வழக்கு தொடர்ந்தால், வழக்கு முடிய, 20 ஆண்டுகளாகும். புதிய சட்டத்தில் அப்படியல்ல. 12 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்பவர், பதிவுக்கட்டணம், 100 ரூபாய் செலுத்தினால் போதும்.
தாங்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக வியாபாரிகள், வணிகர்கள் போராடி இச்சட்டத்தை முடக்கி வைத்துள்ளனர். தவறாக உணவுப்பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச்சட்டத்தை பிரச்சாரம் செய்கின்றனர். உணவுப்பாதுகாப்பு அதிகாரிகளை, அபராதம் விதிக்கும் பயங்கரவாதி போல சித்தரிக்கின்றனர், என்றார்.
"ஃபெட்காட்’ சேர்மன் பாஷ்யம் பேசியதாவது:

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986ல் இயற்றி, வியாபாரிகள் நெருக்கடியால், 89ல் தான் அமலுக்கு வந்தது. அதே போல தான் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டமும் வியாபாரிகளால் முடங்கி கிடக்கிறது. எந்தவொரு சட்டமும், எளிதாக அமலுக்கு வருவதில்லை. மருத்துவர், வியாபாரி என ஒவ்வொரு தரப்பினரும் எதிர்ப்பால் சட்டங்களை முடக்குகின்றனர். அரசியல்வாதிகளும் ஓட்டுவங்கி பாதிக்கக்கூடாது, என்பதற்காக இழுத்தடிக்கின்றனர். அரசியல், ஓட்டுவங்கி போன்ற காரணத்தால், சட்டங்கள் அமலாக தாமதமாகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
"ஃபெப்காட்’ ஆலோசகர் வக்கீல் மார்ட்டின்:

உணவுப்பாதுகாப்பு சட்டத்தில், அரசு அதிகாரிகள் மட்டுமே ஒரு உணவுப்பொருட்களை, "சாம்பிள்’ எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க முடியும். உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டத்தால், தனியொரு மனிதன் உணவை, "சாம்பிள்’ எடுத்து சோதனைக்குட்படுத்தி, வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment