பன்றிகள் மேய்ந்து சுகாதாரமற்ற நிலையில் நவீன அரிசி ஆலை: உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு-

சிதம்பரம் அண்ணாமலைநகர் சி.கொத்தங்குடியில் ஊராட்சியில் ரயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ள தமிழகஅரசின் நவீன அரிசி ஆலையை கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் அரிசி ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் உமி காற்றில் பறந்து அருகாமையில், அவ்வழியே சாலையில் செல்லுபவர்கள் மீது படிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எம்.பி.ராஜா மற்றும் ஆய்வாளர்கள் பத்மநாபன், ஏழுமலை, அருண்மொழி ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைநகர் நவீன அரிசி ஆலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆலையை சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததால், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் மேய்ந்ததையும், திறந்தவெளியில் ஆலையின் நெல்லிருந்து வெளியேற்றப்படும் உமி கொட்டப்படுவதால் காற்றில் பறப்பதையும் பார்த்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆலை வளாகத்தில் பன்றிகளோடு, ஆடு, மாடுகள் மேய்ந்து திரிகின்றன. பன்றிகள் உள்ளே புகுந்து நெல் மற்றும் அரிசியை தின்று நாசம் செய்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக ஆலை ஊழியர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆலை உதவிப் பொறியாளர் ஆர்.சிவராஜனிடம், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உதவிப் பொறியாளர் ஆர்.சிவராஜன் தெரிவித்தது: ஆலையில் நாள் ஒன்றுக்கு 56 டன் நெல் அரவை செய்யப்பட்டு, அரிசியாக்கப்படுகிறது. காம்பவுண்ட் சுவர் இல்லாததால் பன்றி, ஆடு, மாடுகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. ஆலையை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்கவும், உமிகள் கொட்டப்படும் பகுதியில் ஷெட் அமைக்கவும் கோரியுள்ளோம். விரைவில் இந்த ஆலை அதநவீன அரிசி ஆலையாக மேம்படுத்தவுள்ளதாக உதவிப் பொறியாளர் ஆர்.சிவராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment