உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள தயார் ஆகுங்கள் வணிகர்கள் மாநாட்டில் நரேந்திரமோடி பேச்சு

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள தயார் ஆகுங்கள் என்று வர்த்தகர்கள் மத்தியில் நரேந்திரமோடி பேசினார்.வர்த்தகர்கள் மத்தியில் மோடிதலைநகர் டெல்லியில் அனைத்திந்திய வர்த்தகர்கள் சம்மேளன (கெயிட்) 2 நாள் மாநாட்டினை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-உலகளாவிய சவால்களை கண்டு வர்த்தக சமூகத்தினர் ஓடக்கூடாது. ஆன்லைன் வர்த்தகம் நடைபெற்றால், நாம் ஒழிந்து விடுவோம் என்று வர்த்தகர்கள் கருதக்கூடாது. சவால்களை எதிர்கொள்ளத்தக்க அளவில் நீங்கள் (வர்த்தகர்கள்) உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.நம்பிக்கை வேண்டும்சிறிய ஒரு நகரத்தை சேர்ந்த ஒருவர், வர்த்தகச்சின்னம் (பிராண்டட்) தாங்கிய பொருட்களை வாங்க எண்ணுகிறார். இதில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து நாம் கூடி முடிவு எடுக்கக்கூடாது. நீங்கள் உங்கள் பொருட்களின் தரத்தை உயர்த்துங்கள். சந்தேகத்துக்குரிய தரம் குறைந்த பொருட்களை (வர்த்தகத்தில் இருந்து) கழித்துவிடுங்கள். நாட்டில் எண்ணற்ற சட்டங்கள் இருப்பது சிக்கலை ஏற்படுத்துகின்றன. அனைவரையும் அரசாங்கம் திருடர்களாகப் பார்ப்பதாகத் தோன்றுகிறது. ஒரு நாடு சட்டத்தினால் மட்டுமே இயங்கி விட முடியாது. ஒருவரில் மற்றவர் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த நம்பிக்கை தகர்க்கப்படுகிறபோதுதான் அங்கே சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். இதுதான் அடிப்படை அம்சம். இதில் தொடங்கி அரசு நிர்வாகத்தை முழுமையாக செப்பனிட வேண்டும். சட்ட சீர்திருத்தம்சிலந்தி வலைபோல சட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் எங்களுக்கு (ஆள்வதற்கு) வலிமையை கொடுங்கள். அப்போது நாங்கள் வாரத்துக்கு ஒரு சட்டத்தை ரத்து செய்கிறோம். சட்ட சீர்திருத்தம் வேண்டும் என்பதுதான் எனது கொள்கை.உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஆற்றலை வளர்த்துக்கொள்வதில், தரத்தினை உயர்த்துவதில் வர்த்தக சமூகம் கவனம் செலுத்த வேண்டும். பாராட்டுஇடர்பாடுகளை சந்திக்கும் வர்த்தகர்களின் ஆற்றல் பாராட்டுக்குரியது. ஒரு போர் வீரரின் ஆற்றலைவிட மேலானது. உலகமெங்கும் செல்வாக்கை பரப்புவதில் வியாபாரம் மிகப்பெரிய கருவியாக செயல்படும். இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும். செப்பனிட வேண்டும்அரசாங்கமாக இருந்தாலும், வியாபாரியாக இருந்தாலும், விவசாயியாக இருந்தாலும், சமூகமாக இருந்தாலும், நாம் நாட்டுக்காக பாடுபடுகிறோம் என்ற ஊக்க உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஊக்க உணர்வை நாம் வளர்த்துக்கொண்டால், லஞ்சம் கொடுப்பவரும் இருக்க மாட்டார். லஞ்சம் வாங்குபவரும் இருக்க மாட்டார். பிரதமர் முதல் அலுவலக உதவியாளர் வரை ஒட்டுமொத்த அரசாங்கமும் செப்பனிடப்பட வேண்டும்.60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், நிர்வாகத்தில் ஏற்பட்ட ஓட்டை உடைசல்களை எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் சரிசெய்யும். அதற்காக நிறைய உழைப்போம்.இவ்வாறு நரேந்திரமோடி கூறினார்.தமிழக பிரமுகர்கள் பங்கேற்புஇந்த மாநாட்டில் நரேந்திரமோடியிடம், ‘சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, வணிகர்களுக்கு ஓய்வூதியம், காப்பீடு போன்ற பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை மனுவை பி.சி.பார்டியா வழங்கினார். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி., கலந்துகொண்டு பேசினார். மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் அகில இந்திய வணிகர் சங்கங்களின் தேசிய கன்வீனர் மகேந்திர ஷா, துணை தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கே.மோகன், பொருளாளர் வி.கோவிந்தராஜீலு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து, பல்வேறு வணிக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், முன்னாள் மத்திய மந்திரி முரளி மனோகர் ஜோஷி, ஸ்மிருதி இரானி எம்.பி., உள்பட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். மாநாட்டின் நிறைவு விழா, டெல்லியில் உள்ள சிவிக் சென்டர் ஆடிட்டோரியத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

No comments:

Post a Comment