போலி பால் பவுடர் மூடைகள் பறிமுதல்; போலீசாரை “”கிறுகிறுக்க” வைத்த கும்பல்

தேனி :
தேனியில் போலீசாரிடம் பிடிபட்டுள்ள திருட்டுக் கும்பல், போலி பால் பவுடர்களை சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களது குடோனை சோதனையிட்ட போலீசார் 28 போலி பால்பவுடர் மூடைகள், இரண்டு டூவீலர்கள், இரண்டு கார்களை கைப்பற்றினர். தேனியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித்தருவாக கூறி, மோசடியில் ஈடுபட்ட சந்துரு, வீரபத்திரன் போலீசில் சிக்கினர். இவர்களது தகவல் அடிப்படையில், தேனியை சேர்ந்த முகமதுசுகைன், 26, அழகர்ராஜா, 23, கைது செய்யப்பட்டனர். இவர்களின் வீட்டை சோதனையிட்டு, இரண்டு ஏர்கன்கள் (கை துப்பாக்கிகள், ரூபாய் நோட்டுக்களை ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம், பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து திருடுவதற்கான அனைத்து உபகரணங்கள், பலவகை சாவிகள், 16 சிம்கார்டுகள், 3 மொபைல் போன்கள் உட்பட 76 வகையான பொருட்களை கைப்பற்றினர். இக்கும்பலின் தலைவனான சுல்தான் என்பவனை தேடி வருகின்றனர்.இவர்கள், கடன் வாங்கித்தருவது போல் பலரை ஏமாற்றி உள்ளனர். அதேபோல் தமிழகம் முழுவதும் திருட்டுக் கும்பலுடன் தொடர்பு வைத்து, பல வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். தொடர் விசாரணையில் போலீசாரை “”கிறுகிறு”க்க வைக்கும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. இக்கும்பல், தங்கியிருந்த ரத்தினாநகர் அருகே உள்ள கிருஷ்ணாநகரில் ஒரு குடோன் வாடகைக்கு பிடித்துள்ளனர். அந்த குடோனில் போலி பால் பவுடர் மூடைகளை பதுக்கி வைத்துள்ளனர். அங்கு சோதனையிட்ட தேனி போலீசார் 50 கிலோ எடையுள்ள, 28 போலி பால்பவுடர் மூடைகளை பறிமுதல் செய்தனர். ஒரு கிலோ பால் பவுடரில், 10 லிட்டர் கெட்டியான பால் தயாரிக்க முடியும்.இந்த போலி பால் பவுடர், எந்தெந்த பொருட்களில் தயாரித்தனர்?. எவ்வளவு நாட்கள்? ,யார் யாருக்கு சப்ளை செய்துள்ளனர்?, இதனை குடித்தவர்களுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும், என்பது தெரியாமல் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். முகமது சுகைனும், அழகர்ராஜாவும் போலீசாரிடம் பால்பவுடர் ரகசியங்களை தெரிவிக்க மறுத்து வருகின்றனர். இந்த குடோன் அருகே, இரண்டு புதிய டூவீலர்கள், இரண்டு கார்கள் சிக்கி உள்ளன. இவற்றை திருடி வந்ததாக கும்பல் ஒப்புக்கொண்டுள்ளது. எங்கிருந்து திருடப்பட்டன, என்று விசாரித்து வருகின்றனர். ஒரே குற்றவாளிகள்,இத்தனை வகையான குற்றங்களில் ஈடுபட முடியும். இவர்கள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதால், “கிறுகிறு’த்துப்போன போலீசார், இன்னும் சில நாட்கள் தங்கள் பொறுப்பில் வைத்து தொடர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment