15 ஆண்டுகளாக செயல்பட்ட கலப்பட டீத்தூள் தொழிற்சாலைக்கு 'சீல்'

கோவை: கோவையில், 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த, போலி டீத்தூள் தொழிற்சாலைக்கு, 'சீல்' வைத்து, 3.5 டன் கலப்பட டீத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை, உடையாம்பாளையத்தில், கலப்பட டீ தொழிற்சாலை செயல்படுவதாக, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நியமன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம், உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள், தொழிற்சாலையில் ஆய்வு நடத்தி, 3.5 டன் போலி டீத்தூளை பறிமுதல் செய்து, குடோனுக்கு, 'சீல்' வைத்தனர். கலப்ப டீத்தூளின் மதிப்பு, ஐந்து லட்சம் ரூபாய்.

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் கூறியதாவது: கலப்பட டீத்தூள் தொழிற்சாலை உரிமையாளர் பாலன், 51. இவர், நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏலத்தில் கொள்முதல் செய்யும் டீத்தூளில், மணம் ஏற்படுத்த, சில, 'ப்ளேவர்'களையும், நிறமேற்ற ரசாயன பொருட்களையும் கலப்படம் செய்துள்ளார். டீத்தூளில் கலப்படத்திற்கான ரசாயன பவுடரை, சப்ளை செய்த கோவையை சேர்ந்த ஹக்கீமை தேடி வருகிறோம். கலப்பட டீத்தூளில் டீ குடிப்பதால், வயிறு உபாதைகள் ஏற்படும். தினமும் நுகர்வு செய்யும் போது, நாளடைவில் புற்றுநோயாக மாறி விடும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment