மாம்பழ குடோன்களில் அதிகாரிகள் சோதனை

சேலம்: சேலத்தில் உள்ள மாம்பழ குடோன்களில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று திடீர் சோதனை நடத்தினர். சேலம், சின்னக்கடை வீதியில், மாம்பழ குடோன்கள் இருக்கின்றன. இங்குள்ள குடோன்களில், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், கார்பைட் கல் மூலம், மாம்பழங்களை பழுக்க வைத்துள்ளனரா என, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அனுராதா மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று சோதனை நடத்தினர். சேலம் சின்னக்கடை வீதி, ராஜகணபதி கோவில், அரசமர பிள்ளையார் கோவில் பகுதியில், ஆறு குடோன்கள் மற்றும், 40க்கும் மேற்பட்ட கடைகளில், சோதனை நடத்தினர். மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, ஆப்பிள் விற்பனையாகும் கடைகளிலும், சோதனை நடந்தது. சோதனையில், எதுவும் சிக்கவில்லை. சந்தேகப்பட்ட ஒரு கடையில் மட்டும், ஆப்பிள் பழங்களை எடுத்து வந்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: கார்பைட் கல் வைத்து பழுக்க வைப்பதற்கு பதில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, பத்து மில்லி எத்திலின் டானிக் கலந்து, பழங்களின் மீது ஸ்பிரே செய்கின்றனர். எத்திலின் தெளிக்கப்பட்ட பழங்கள், எந்த ஒரு கேடும் விளைவிப்பதில்லை. அப்பழங்கள், ஓரிரு நாளில் பழுத்து, விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதனால், பொதுமக்கள், பயப்படாமல், மாம்பழங்களை வாங்கி சாப்பிடலாம். சேலம் மாவட்டத்தில், 95 சதவீதம், கார்பைட் கல் வைத்து பழுக்க வைப்பதில்லை. இதனால், பயப்பட தேவையில்லை. இவ்வாறு கூறினார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அசோக்குமார், ஜெகநாதன், புஷ்பராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment