உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

ஓசூர்: ஓசூர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில், ஐந்து நாட்களுக்கு முன் வெட்டப்பட்ட ஆடு, கோழியில் இருந்து பிரியாணி தயாரிக்கப்படுவதாக, செய்தி வெளியானதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை கலெக்டர் ராஜேஷ் கண்டித்தார். இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், நீதிமன்றம், வட்ட வழங்கல் அலுவலகம், டவுன் போலீஸ் ஸ்டேஷன், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவற்றுக்கு வரும் பொதுமக்களின் கூட்டத்தை நம்பி, தாலுகா அலுவலகத்தை சுற்றி, பல ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்த ஹோட்டல்களில், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுவதில்லை. உதாரணமாக, ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை சமைக்கும் ஹோட்டல்களில், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டு, ஐந்து நாட்களுக்கு மேலான இறைச்சி பயன்படுத்துவதால், இதை சாப்பிடும் பொதுமக்களுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படுகிறது.
இதை அறிந்த, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களும், ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஓசூர் தாலுகா அலுவலகத்தை சுற்றியுள்ள ஹோட்டலுக்குள் நுழைந்தாலே, துர்நாற்றம் வீசுகிறது. ஓசூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்களும், தாலுகா அலுவலகத்தை சுற்றியுள்ள ஹோட்டல்களின் நிலைமை தெரியாமல் அங்கு சாப்பிடுகின்றனர். இதனால், பல பொதுமக்கள், நோய்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உள்ளதென, "செய்தி வெளியானது.இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டடார். தற்போது, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment