கார்பைட் கல்லில் பழுத்த மாம்பழங்கள் உணவு பாதுகாப்பு அலுவலர் தூக்கம்-தினமலர் செய்தி

ஈரோடு: மாம்பழம் சீஸன் துவங்கி விட்ட நிலையில், மார்க்கெட்டிலும், பழக்கடைகளிலும், செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பதை, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தடுக்க வேண்டும், என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஈரோடு பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், பெரியார் நகர், சம்பத் நகர் உழவர் சந்தை, பழமுதிர் நிலையங்கள் மற்றும் பிற இடங்களில், மாம்பழங்கள் வரத்துவங்கி உள்ளன. ஈரோடு மார்க்கெட் மற்றும் சுற்றுப்பகுதியில், விற்பனைக்காக தினமும், பத்து டன் மாம்பழங்கள் சேலம், தர்மபுரி, மேச்சேரி உட்பட, பல்வேறு பகுதிகளில் இருந்து, கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு பெறுவதற்காக, வியாபாரிகள் தோப்புகளில் இருந்து காய்களாக இருக்கும் போதே, பறித்து, விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மார்க்கெட் பகுதியில் குடோன்களில் நிரப்பி வைக்கப்படும், இந்த காய்களை பழுக்க வைப்பதற்காக, செயற்கை கற்கள் (கார்பைட்), சிறு, சிறு பொட்டலங்களாக மடிக்கப்பட்டு, காய்களுக்கு மத்தியில், இரவில் வைத்து சென்று விட்டால், காலையில் அனைத்து காய்களும், பழுத்த பழங்களாகி விடுகிறது. இதுபோன்ற, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களை பயன்படுத்துவதால், தொண்டை எரிச்சல், இருமல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படுகிறது. பல நேரங்களில், கார்பைட் கற்கள் பயன்படுத்திய பழங்களை பயன்படுத்தும் பலரும், பெரும் உடல் ரீதியான நோய்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே, ஒவ்வொரு முறையும், இதுபோன்ற சீஸன்களில், மாநகராட்சி அதிகாரிகள் ரெய்டு நடத்தி, கார்பைட் கற்கள் மூலம் பயன்படுத்தும் வியாபாரிகள் மீது, நடவடிக்கை எடுத்து, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை, பறிமுதல் செய்து வந்தனர். தற்போது உணவு பாதுகாப்புக்கு என்றே, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு விட்டதால், மாநகராட்சி போன்ற உள்ளாட்சி துறைகளில் நடவடிக்கை மேற்கொள்வதில்லை. ஈரோடு மார்க்கெட் மற்றும் நகரின் பல பகுதிகளில், தற்போது மாம்பழங்கள் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. ஆகவே, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment