மே தின மாநாட்டில் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்பு: விக்கிரமராஜா பேட்டி

கோவை, மே.3–
தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 31–வது ஆண்டு வணிகர் தின மாநாடு மே–5ந் தேதி கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மேற்குவங்காளம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, புதுடெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாடு காலை 7.15 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகின்றன. தொடர்ந்து 9 மணிக்கு கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா தலைமையில் மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகர் வணிக கொடி ஏற்றுகிறார். மாவட்ட செயலாளர் வி.சி.நாகராஜன், மாவட்ட பொருளாளர் வஹாப் வரவேற்புரை யாற்றுகிறார்கள். அகில இந்திய வணிகர் சம்மேளன பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேவால் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மாநில துணைதலைவர் பாலநாகமாணிக்கம், மாநில இணை செயலாளர் சக்திவேல், லாலா கணேஷன், அப்துல் ரஷித் உள்பட பலர் பேசுகிகிறார்கள். மாநாட்டில் ஸ்ரீராம் குரூப்ஸ் அகிலா ஸ்ரீனிவாசன், அரசன் சோப் அருள் சிங், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் பாலசுந்தரம், அன்னபூர்ணா குருப்ஸ் தலைவர் ஸ்ரீனிவாசன், அகில இந்திய வணிகர்கள் சம்மேளன கன்வீனர் மகேந்திர ஷா, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடசுப்பு உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சி தவிர மற்ற அனைத்து கட்சியினரும் சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை தடை செய்ய உறுதியளித்தனர். தேர்தலில் வெற்றி பெற்று வரும் அரசியல் கட்சியினர் இந்த மாநாட்டை தொடர்ந்து எங்களை அழைத்து பேசுவார்கள் என நம்புகிறோம்.
மேலும் வணிகர்கள் நல வாரியத்தை சீரமைக்க வேண்டும். 60 வயது நிரம்பிய வணிகர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.வணிகர்களின் பாதுகாப்புக்காக தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இந்த மாநாடு இந்தியா முழுவதும் உள்ள 7 கோடி வணிகர்கள் மற்றும் அவர்களை நம்பியுள்ள 21 கோடி பேர்களின் வாழ்வாதாரத்துக்காக நடத்தப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் கோவைக்கு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக கோவையில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களும் புக் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ளும் வணிகர்களுக்கு உணவு மாநாட்டு பந்தலில் வழங்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் அன்று அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மற்றும் பேக்கரிகளுக்கும் விடுமுறை அளித்து வணிகர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment