ரூ.1 லட்சம் ‘ரசாயன மாம்பழங்கள்’ கோயம்பேடு மார்க்கெட்டில் பறிமுதல்

சென்னை:சென்னை கோயம்பேடு காய்கறி பழ சந்தையில் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாம்பழ சீசன் தொடங்கி இருக்கிறது. இதனால் சென்னைக்கு மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் மாம்பழங்கள் ‘கார்பைடு கல்’ வைத்து பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி சதாசிவம் மற்றும் அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது 2 கடைகளில் இருந்த மாம்பழ பெட்டிகளில் அவற்றை பழுக்க வைப்பதற்காக ‘கார்பைடு’ ரசாயன கல் வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். 1 கிலோ எடையுள்ள அந்த கற்கள் அப்பறப்படுத்தப்பட்டன.
‘கார்பைடு’ கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘கார்பைடு, ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிட்டால், உடல் நலம் பாதிக்கப்படும். வயிற்று போக்கு, தலைசுற்றல் ஏற்படும். புற்றுநோய் வரவும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த முறையில் மாம்பழம் பழுக்க வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற மாம்பழங்களை சாப்பிடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போது அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment