102 “கேன்’ குடிநீர் நிறுவனங்களுக்கு தடை

சென்னை:
பொதுப்பணி துறை அனுமதியின்றி இயங்கும், 102 “கேன்’ குடிநீர் நிறுவனங்களுக்கு தடை விதித்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இயங்கும் “கேன்’ குடிநீர் நிறுவனங்கள் குறித்த ஆய்வில், 252 நிறுவனங்கள், வறட்சியான பகுதிகளில் செயல்பட்டு வந்தது தெரிந்தது.
இதுகுறித்த வழக்கு, சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வந்த நிலையில், 252 கேன் குடிநீர் நிறுவனங்கள், வறட்சியான பகுதிகளில் இயங்குவதாகவும், அந்த நிறுவனங்கள், தங்கள் அனுமதியை பெறவில்லை என்றும், பொதுப்பணி துறை, தீர்ப்பாயத்தில் தெரிவித்தது. இதை தொடர்ந்து, அந்த, குடிநீர் நிறுவனங்களுக்கும் தடை விதித்து, தீர்ப்பாயம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, பிப்., 13ம் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தது. தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி சொக்கலிங்கம், உறுப்பினர் நாகேந்திரன் முன்னிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பணி துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். அவர்கள் கூறுகையில், “252 நிறுவனங்களில், 150 நிறுவனங்கள் தடையின்மை சான்று கோரி விண்ணப்பித்து உள்ளன. 102 நிறுவனங்கள் விண்ணப்பிக்கவில்லை’ என்றனர்.
இதை அடுத்து, வறட்சியான பகுதிகளில் நிலத்தடி நீரை எடுப்பதால், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, “கேன்’ குடிநீர் நிறுவனங்கள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினர். பின், தடையின்மை சான்றுக்கு விண்ணப்பிக்காத, 102 நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க தடை விதித்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment