பறிமுதல் செய்யப்பட்ட போதை புகையிலை மூட்டைகள் மாயம்

கோவையில் வணிகவரித் துறையினர் பறிமுதல் செய்த 200 மூட்டை போதை புகையிலை பாக்கெட்களில், ரூ. 12 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்கள் மாயமான விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
கோவை, ராஜவீதி, தாமஸ் வீதி உள்ளட்ட பகுதிகளில் வடமாநில மொத்த வியாபாரிகள் சிலர், தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள், புகையிலை உள்ளிட்டவற்றை வடமாநிலங்களிலிருந்து வாங்கிவந்து, கிடங்குகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் கோவை வணிகவரித் துறையினர் ராஜவீதி பகுதிகளில் உள்ள கிடங்குகளில் சோதனை செய்தனர். அப்போது "ஏ.ஆர்.பச்சாவால் டிரேடிங் பிரைவேட் லிமிடேட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கிலிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய 200 மூட்டைகள் தடை செய்யப்பட்ட "ஹான்ஸ்’ புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை மூட்டைகள் கோவை உணவுப் பாதுகாப்புப் பிரிவினர் வசம் ஒப்படைக்கப்பட்டன. பிறகு, அவற்றின் மீதான மேல் நடவடிக்கை குறித்து அனுமதி கேட்டு உணவுப் பாதுகாப்புத் துறையினர் சார்பில் மேலிடத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பதில் வரும் வரை பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க, அந் நிறுவனப் பொறுப்பாளர்களிடம் தேவையான ஆவணங்கள் பெறப்பட்டு அதே கிடங்கில் வைக்கப்பட்டன.இந்நிலையில் ஏப்ரல் முதல் தேதி, பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை மூட்டைகளை அழிக்க அனுமதி வழங்கி உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு கடிதம் வந்தது. அதைத் தொடர்ந்து புகையிலைகளை எடுத்துவர வாகனங்களுடன் அதிகாரிகள் சென்றபோது, அந்தக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 200 மூட்டைகளில் ரூ. 12 லட்சத்து 24,000 மதிப்புள்ள 136 மூட்டை புகையிலை பாக்கெட்கள் திருட்டு போய்விட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து கோவை உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் எம்.ஆர்.கதிரவன் அளித்த புகாரின் பேரில், வெறைட்டிஹால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment