பால் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே தனியார் பால் கொள்முதல் மையங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பாலில் கலப்படம் செய்ய வைத்திருந்த ரசாயனப் பவுடரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
செந்தாரப்பட்டியில் உள்ள 5 தனியார் பால் கொள்முதல் மையங்கள் மூலம் தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள சில பால் கொள்முதல் நிலையங்களில் பாலின் அடர்த்தியை அதிகரிக்க மால்டோஸ் எனும் ரசாயனப் பவுடர் கலக்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதாவுக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை செந்தாரப்பட்டியில் உள்ள பால் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். இதில், கண்ணன் என்பவர் வீட்டில் பாலில் கலப்படம் செய்வதற்காக இருப்பு வைத்திருந்த 7 மூட்டை மால்டோஸ் பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:
பாலில் மால்டோஸ் ரசாயனப் பவுடரை கலப்படம் செய்யும்போது கொழுப்புச் சத்து உள்ளிட்ட சத்துகள் அதிகமாகும். இதனால், பால் விற்பனை அதிகரிக்கும், கலப்படக்காரர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். ஆனால், இந்த பாலைக் குடிக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.

No comments:

Post a Comment