கோவையில் மே மாதம் 5-ந்தேதி வணிகர் தின மாநில மாநாடு

கோவையில் அடுத்த மாதம் 5-ந்தேதி வணிகர் தின மாநில மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி கொடிசியாவில் பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா நடைபெற்றது.
வணிகர் தின மாநில மாநாடு
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே மாதம் 5-ந்தேதி வணிகர் தின மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா கொடிசியாவில் நேற்று காலை நடைபெற்றது. வணிகர் சங்கபேரமைப்பு தலைவர் ஏ.விக்கிரமராஜா இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் கே.மோகன் வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் வி.கோவிந்தராஜுலு, கோவை மாவட்ட தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் ஜி.இருதயராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்கோள் விழாவை தொடர்ந்து மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.விக்கிரமராஜா கூறியதாவது:-
5 லட்சம் பேர்
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிர்ப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை முழுமையாக மாற்றியமைத்தல், வரிச்சட்டங்களை சீரமைத்தல், சில்லரை வணிகத்தை மேம்படுத்த தனித்துறை ஏற்படுத்துதல், வணிகர்களை பாதிக்கின்ற பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையிலும் வரும் மே மாதம் 5-ந்தேதி வணிகர் தின மாநில மாநாடு கோவையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் 5 லட்சம் பேர் குடும்பத்துடன் கலந்துகொள்கிறார்கள். மேலும் இந்தியா முழுவதிலும் இருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
மே 5-ந்தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து வணிகர்களும் தங்களது ஒற்றுமையையும், எழுச்சியையும் எடுத்துக்காட்டும் வகையில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை
வணிகர்களின் முக்கிய கோரிக்கைகளை தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் மத்திய அரசால் 6 மாத காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தேர்தல் நடைபெறுகிற இந்த காலகட்டத்திலும் உணவு வணிகர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்கள். இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் குறித்து தமிழக அரசு தெளிவான நிலையை அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வணிக உரிமங்களை புதுப்பிக்க மே 31-ந் தேதி வரை தமிழக அரசு கால அவகாசம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் வணிகம் முடங்காத நிலையிலும், வணிகர்களின் பணத்தை பறிமுதல் செய்யாத வகையிலும் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

No comments:

Post a Comment